தமிழக செய்திகள்

Vijay | விஜய் படங்களை தியேட்டர், டிவி-யில் ஒளிபரப்பக்கூடாது - தேர்தல் ஆணையத்திற்கு பறந்த கடிதம்

தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மாலை மலர்

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைந்த நாட்களே உள்ளன. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தேர்தல் காரணமாக தமிழ் நாடு அரசியல் களம் பரபரத்து வருகிறது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக போட்டியிடுகிறது. விஜயின் அரசியல் வருகை தேர்தல் களத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களுக்கு வழிவகை செய்துள்ளது. அந்த வரிசையில், நடிகர் விஜயின் திரைப்படங்களை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகள் மற்றும் தொலைகாட்சிகளில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் செய்யது பாபு தேர்தல் ஆணையருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் தமிழ் நாட்டில் தேர்தல் முடியும் வரை நடிகர் விஜயின் திரைப்படங்களை திரையரங்குகள் மற்றும் தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். இவரது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் உருவான "ஜனநாயகன்" திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியும், தணிக்கை சான்று கிடைக்காத காரணத்தால் வெளியிடப்படாமல் உள்ளது. தற்போதைய சூழலில் இந்தப் படம் தேர்தல் முடியும் வரை ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான திரைப்படங்களையும் ஒளிபரப்பக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசியலில் தனி கவனம் பெற்றுள்ளது.