Coimbatore
தமிழக செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்குத் தடை!

அசம்பாவிதங்கள் நடக்காமல் இறுகபார்வையாளர் அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாட்டின் முக்கிய பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து முனையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு, பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்குத் தடை:

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் இந்த விமான நிலையத்தையே நம்பியுள்ளனர்.

இந்நிலையில் வழக்கமாக பயணிகளை வழிஅனுப்ப வருபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கட்டணம் செலுத்தி, பிரத்யேக 'பார்வையாளர் பாஸ்' பெற்று விமான நிலையத்தின் உள்ளே சென்று வருவது வழக்கம்.

ஆனால், சுதந்திர தின முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு, இந்த பார்வையாளர் அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்:

இது குறித்து கோவை விமான நிலைய உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

"சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் உத்தரவுப்படி இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் பிரத்யேக பாஸ்கள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. பயணிகள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்." என்று தெளிவாக கூறியுள்ளனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு:

சுதந்திர தினக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால், கோவை விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை மற்றும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய நுழைவாயில், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகள் அனைத்தும் நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் வெவ்வேறு நிலைகளில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் வழக்கம் போல் வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே விமான நிலையத்திற்கு வருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.