பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து விழுந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி என அனைத்து அருவிகளுக்கும் இரவில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் நேற்று இரவு 10.30 மணி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று காலையில் மழைப்பொழிவு குறைந்ததால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைய தொடங்கியது.
இன்று காலையில் மெயினருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் பழைய குற்றால அருவியில் மட்டும் தண்ணீர் தொடர்ந்து ஆர்ப்பரித்து விழுந்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இன்று காலை முதல் தென்காசி மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தாலும் மழைப்பொழிவு சற்று குறைந்தே காணப்படுகிறது.