நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதை வழியாக மசினகுடி, தெப்பக்காடு பகுதிகளுக்கு சுற்றுலா வாகனங்கள் சென்று வந்தன. இந்த பாதை அபாயகர சரிவுகள் மற்றும் 36 குறுகிய வளைவுகளை உடையது.
இதனால் கல்லட்டி மலைப்பாதையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி மசினகுடி செல்ல வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஊட்டி நோக்கி வரும் சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்த சாலைகளில் சுற்றுலா வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்கவும், இணைப்பு சாலைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இருந்தபோதிலும் அங்கீகரிக்கப்பட்ட சவாரி வாகனங்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி மசினகுடி சாலையில் அங்கீககரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மட்டுமே செல்ல ஏதுவாக, அந்த சாலையில் வனத்துறையினர் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மசினகுடி, மாயார், சிங்காரா, விபூதி மலை சாலைகளில் இன்று முதல் அங்கீகரிக்கப்பட்ட சவாரி ஜீப்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வெளியூர் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் உள்ளூர் வாகனங்கள் மேற்கண்ட சாலைகளை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.