டிரோன் 
தமிழக செய்திகள்

சென்னையில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: போலீசார் அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி, தி.நகர், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் வருகிற 15-ந்தேதி 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் விஜய் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார்.

சென்னை மாநகரில் பி.என்.எஸ். பிரிவு 14 (2)படி டிரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் ஆகியவை பறப்பதற்கு கடந்த ஜூன் 19-ந்தேதி முதல் வருகிற 17-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும் நிலையில் சுதந்திர தின பாதுகாப்பை கருத்தில் கொண்டு வருகிற 14 மற்றும் 15 ஆகிய 2 நாட்களும் (அரசு ஏற்பாடுகள் தவிர ) தலைமைச் செயலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வரை உள்ள வழித்தடங்களில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள்

இந்த நிலையில் வருகிற 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னைக்கு வருகை தர உள்ளார். இதையொட்டி அந்த நாட்களிலும் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருகிற 14-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை 4 நாட்கள் சென்னை மாநகர பகுதிகளில் டிரோன்களை பறக்க விடக்கூடாது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி, தி.நகர், அரும்பாக்கம் ஆகிய பகுதிகள் மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பயணிக்கும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட இடங்களில் டிரோன் கேமராக்களுடன் ஆளில்லா வான்வழிகருவிகள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 4 நாட்களும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வாகன சோதனையையும் தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.