கோவில் வளாகத்துக்குள் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையினை கோவில் நுழைவு வாசல் மற்றும் வெளியே பக்தர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
ஆனாலும் சில கோவில்களில் இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாமல் சமீப காலமாக சில பக்தர்கள் கோவில்களுக்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், செல்பி எடுத்தல், சமூக வலைதளங்களுக்கான குறும்படம் (ரீல்ஸ்) எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோவில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மீக சூழல் பாதிக்கப்படுவதோடு இறை வழிபாடு செய்ய வருகை தரும் பக்தர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
எனவே கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும் வருகை தரும் பக்தர்களின் செல்போன்களை பெற்று பாதுகாத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைப்பது குறித்த நடைமுறையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுக்க சில முக்கிய கட்டுப்பாடுகள் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவில் வளாகத்துக்குள் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகையினை கோவில் நுழைவு வாசல் மற்றும் வெளியே பக்தர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் வைக்கப்பட வேண்டும்.
ஒலி பெருக்கி மூலமும் இந்த தகவலை அறிவிக்க வேண்டும்.
பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும் முன் தங்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் கைபேசி பாதுகாப்பு பெட்டக வசதியினை கோவில் நிர்வாகம் உடனே ஏற்படுத்த வேண்டும்.
இந்த மையங்கள் கோவில் நுழைவு வாசல் அல்லது காலணி பாதுகாப்பு மையத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.
செல்போன்களை பெற்று பாதுகாப்பதற்கான கட்டணமாக ஒரு செல்போனுக்கு ரூ.5 தொகை வசூலிக்கப்பட வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்பட வேண்டும்.
வருகிற 1-ந்தேதி முதல் அனைத்து முதுநிலை கோவில்களிலும் பக்தர்கள் செல்போனை கோவிலுக்குள் கொண்டு செல்லும் நடைமுறை முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
பக்தர்களிடம் இருந்து செல்போனை பெற்று பாதுகாப்பாக வைத்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கும் பணிக்கு தேவையான பணியாளர்கள், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
கோவில் வளாகத்துக்குள் செல்போனை பயன்படுத்துவது புகைப்படம், வீடியோ எடுப்பது குறித்து கண்காணித்திட போதிய எண்ணிக்கையிலான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ எடுக்கும் பக்தர்கள் மீது போலீசில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிலுக்குள் இறைவனின் உருவங்களை புகைப்படம் எடுப்பது, கோவில் வளாகத்தில் புகைப்படம் எடுப்பது, வீடியோ ரீல்ஸ் போன்றவற்றை பதிவு செய்வது மற்றும் வி.ஐ.பி.க்கள், முக்கியஸ்தர்கள், திரைத்துறை பிரபலங்களுடன் கோவிலுக்குள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.