சென்னைக்கு வந்த விமானத்தில் பவர் பேங்க் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. பாதுகாப்பு இல்லாத மொபிகின்ஸ் எம்.கே.-பிபி-04 மாடல் பவர் பேங்க் விமானங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. பயணிகள் தரமான சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 180 பயணிகளுடன் வந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென விமானத்தின் உள்பகுதியில் பொருட்கள் வைக்கும் கேபினில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் ஐதராபாத்தில் அவசரமாக தரையிறங்கியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விமான பாதுகாப்பு துறையினர் நடத்திய விசாரணையில் ஒரு பயணியின் கைப்பையில் இருந்த, பவர் பேங்க் தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பவர் பேங்க்கை ஆய்வு செய்த போது முழுமையான பாதுகாப்பு இல்லாத ரகத்தைச் சேர்ந்த பவர் பேங்க் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து விமான பாதுகாப்பு, விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஜி.சி.ஏ) மொபிகின்ஸ் எம்.கே.-பிபி-04 மாடல் பவர் பேங்க்கை இந்தியாவில் இருந்து, வெளிநாடுகளுக்கு புறப்படும் அல்லது இந்தியாவுக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் எடுத்து செல்வதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த ரக மாடல் பவர் பேங்க்கை, விமான பயணிகள் கைப்பைகளில் எடுத்துச் செல்வது, செக்கின் பைகளில் எடுத்துச் செல்வது, அல்லது சரக்கு போக்குவரத்து கார்கோ விமானங்களில் அனுப்புவது என்று, எந்தவிதமாகவும் விமானங்களிலும் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்திலும், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளின் உடைமைகளை இன்று அதிகாலை முதல் தீவிரமாக கண்காணித்து, பவர் பேங்க் சாதனங்களை முழுமையாக ஆய்வு செய்கின்றனர். இதனால் விமான பயணிகள் தாங்கள் விமானங்களில் எடுத்து செல்லும் பவர் பேங்க் தரமான ரகத்தை சேர்ந்ததா என்று ஆய்வு செய்து எடுத்துச் செல்லும் படி அறிவுறுத்தி உள்ளனர்.