தேனி மாவட்ட பகுதியில் வருசநாடு, காந்திகிராமம், வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட ஏராளமான மலைத்தொடர்கள் உள்ளன. வனக்காப்பக பகுதி என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
வருசநடு, மேகமலை வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனக்காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டது. தேனி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை உள்ளடக்கிய இந்த வனக்காப்பகத்தில் பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் தேனி மாவட்ட பகுதியில் வருசநாடு, காந்திகிராமம், வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட ஏராளமான மலைத்தொடர்கள் உள்ளன. வனக்காப்பக பகுதி என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பட்டா உள்ளவர்கள், பழங்குடியின மக்கள் மட்டுமே வனப்பகுதிக்குள் செல்ல முடியும். மேலும் நேரக்கட்டுப்பாடும் உண்டு. ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க மலைக்கிராமங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொலைதூரம் சென்று வெடிக்கும் ராக்கெட் உள்ளிட்ட வான வேடிக்கைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்ப்டடுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்,
மஞ்சனூத்து, கொம்புக்காரன் புலியூர், மல்லப்புரம் உள்ளிட்ட 3 சோதனை சாவடிகள் வழியாக மக்கள் சென்று வருகின்றனர். பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மலைக்கிராமங்களுக்குள் பட்டாசு கொண்டு வருவதை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
இதேபோல் போடி, கம்பம், கூடலூர், தேவதானப்பட்டி வனச்சரகங்களில் உள்ள மலை கிராம எல்லைகளிலும் இந்த ஆண்டு பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க சோதனைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. வனவிலங்குகளுக்கு இடையூறு இல்லா வண்ணம் பசுமை தீபாவளியை கொண்டாட வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.