அருவியை பார்க்க மட்டும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்த நிலையில், நேற்று வெகுவாக குறைந்தது. தொடர்ந்து இன்றும் காலை முதலே வெயில் அடித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று மழை குறைந்துவிட்ட நிலையிலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்தால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைநீர்மட்டம் நேற்று 50 அடியை கடந்த நிலையில் இன்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 53 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 892 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 1 அடி உயர்ந்து 63 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 619 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக கன்னடியன் கால்வாயில் 17 மில்லி மீட்டரும், ராதாபுரத்தில் 8 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
மணிமுத்தாறு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருந்து வருவதால் சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு இன்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியை பார்க்க மட்டும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று முன்தினம் கனமழை பெய்த நிலையில் நேற்று பகலில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. மாலை நேரத்தில் சிவகிரி சுற்றுவட்டாரத்தில் மட்டும் 26 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மற்ற இடங்களில் லேசான சாரல் மட்டுமே அடித்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்துவிட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடனா அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. அந்த அணைக்கு வினாடிக்கு 262 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 52 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியாகவும் உள்ளது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 106 அடியை நெருங்கி உள்ளது. தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.