தமிழக செய்திகள்

கனமழை- மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை

ஊத்து எஸ்டேட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது.

கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக மாஞ்சோலை வனப்பகுதியான ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி எஸ்டேட் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஊத்து எஸ்டேட் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6 சென்டி மீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது.

மணிமுத்தாறு

கனமழையால் மணிமுத்தாறு அருவியில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதனால் சூழல் சுற்றுலாவின் பொருட்டு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவியை பார்க்க மட்டும் விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மழை

மாவட்டத்தில் அம்பை சுற்றுவட்டாரத்தில் 4 சென்டிமீட்டரும், நாங்குநேரியில் 4½ சென்டிமீட்டரும் மழை பெய்தது. மூலைக்கரைப்பட்டி, களக்காடு, கன்னடியன் கால்வாய் பகுதி மற்றும் நம்பியாறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மாநகரை பொறுத்தவரை நெல்லை சந்திப்பு பகுதியில் இரவு சுமார் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.

பாதாள சாக்கடை பணிக

நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலை, சிந்துபூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாளை மார்க்கெட் பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. பாளை பகுதியில் ஏராளமான தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் சாலைகள் சகதிக்காடாக மாறியது. இதனால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதியடைந்தனர். சுமார் ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. பாளையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.

பாபநாசம் அணை

அணைகளை பொறுத்தவரை 143 அடி கொண்ட பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் நீர் இருப்பு தற்போது 41.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 181.48 கன அடியாகவும், வெளியேற்றம் 229.75 கன அடியாகவும் காணப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர் இருப்பு இன்று 55 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் இல்லை. அங்கு 12 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 59 ½ அடியாக உள்ளது. நீர் வரத்து 96 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் உள்ளது. அங்கு 35.8 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை ஆய்குடி, சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அடவிநயினார், குண்டாறு, கருப்பாநதி அணை பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கருப்பாநதியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருந்தது.

தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் 28 அடியாகவும், கடனா அணை நீர்மட்டம் 56 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 48 ½ அடியாகவும் உள்ளது.

SCROLL FOR NEXT