பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவன உரிமையாளர்கள் குப்பைகளை தனியாக பிரிக்க வேண்டும். சுகாதாரமற்ற மற்றும் அபாயகரமான கழிவுகளை அந்த இடத்திலேயே சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடையே குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில் “குப்பையை பிரிப்போம் நாளையை காப்போம்” என்ற 40 நாள் சிறப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வீடுகளில் பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் 4 வகையாக பிரிக்கப்பட்டு சேகரிக்கப்பட உள்ளன. மக்கும் குப்பை மக்காத குப்பை, சுகாதார கழிவு மற்றும் ஆபத்தான கழிவு என தரம் பிரித்து சேகரிக்கப்பட உள்ளது.
இதற்கான விழிப்புணர்வு முதல் கட்டமாக தெற்கு வட்டாரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் 50 ஆயிரம் வீடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக அடையாறு மண்டலம் 179-வது வார்டுக்கு உட்பட்ட குப்பம் கடற்கரை சாலையில் இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தெற்கு வட்டார துணைத் தலைவர் அதாப் ரசூல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மக்காத குப்பைகளை தனியாக சேகரித்து வழங்குவதற்கான பிரத்யேக பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் வீடுகளில் சுவற்றில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
மண்டலம் 11 முதல் 15 வரை உள்ள குடியிருப்பு பகுதிகளில் வீடு வீடாக விழிப்புணர்வு நடைபெறுகிறது. பெருமளவு குப்பைகளை உருவாக்கும் நிறுவன உரிமையாளர்கள் குப்பைகளை தனியாக பிரிக்க வேண்டும். சுகாதாரமற்ற மற்றும் அபாயகரமான கழிவுகளை அந்த இடத்திலேயே சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ந்தேதி முதல் அதனை பின்பற்றாவிட்டால் அபராத நடவடிக்கை தொடரும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.