தமிழக செய்திகள்

மோசமான வானிலை: கோவையில் அமைச்சர் பயணித்த விமானம் தரையிறங்க முடியாமல் தவிப்பு!

மும்பையிலிருந்து மதுரை நோக்கி வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகிறது.

வானிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலின்படி விமானத்தை மதுரைக்கு திருப்ப விமானி முடிவெடுத்தார்.

கோவையில் நிலவி வரும் கடும் சீரற்ற வானிலை காரணமாக, சென்னையில் இருந்து கோவை சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் தரையிறங்க முடியாமல் ஆகாயத்தில் வட்டமிட்டு, இறுதியில் மதுரை விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

கோவை வானிலை மாற்றம்

சென்னையிலிருந்து கோவை நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பயணிகள் பயணித்தனர். கோவை வான்வெளியை விமானம் அடைந்தபோது, அங்கு நிலவிய கடும் மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக ஓடுதளத்தை அணுகுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி விமானத்தை உடனடியாகத் தரையிறக்க முடியாத நிலையில், விமானி வானத்திலேயே சிறிது நேரம் விமானத்தை வட்டமடிக்கச் செய்தார்.

மதுரைக்கு திருப்பப்பட்ட விமானம்

வானிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டுதலின்படி விமானத்தை மதுரைக்கு திருப்ப விமானி முடிவெடுத்தார். தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தை சென்றடைந்த அந்த விமானம் அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மும்பை-மதுரை விமானம்

இதேவேளையில், மும்பையிலிருந்து மதுரை நோக்கி வந்த மற்றொரு இண்டிகோ விமானமும் வான்வெளியில் சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாகத் தரையிறங்க முடியாமல் ஆகாயத்தில் வட்டமிட்டபடி இருந்தது. கோவையிலிருந்து திருப்பப்பட்ட விமானம் மதுரையில் தரையிறங்கியதை தொடர்ந்து, சற்றே தாமதமாக மும்பை விமானமும் மதுரையில் பாதுகாப்பாக தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT