108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், திருமாலிருஞ்சோலை என்றும் அழைக்கப்படும் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும். மலையில் இருந்து புறப்படும் சுந்தரராஜ பெருமாள் மதுரையில் தங்க குதிரையில் எழுந்தருளி வைகை ஆற்றில் இறங்குவார். இதனை காண லட்சக்கணக்கானோர் திரளுவர்.
இந்த ஆண்டுக்கான விழா நாளை (27-ந்தேதி) அழகர் கோவிலில் தொடங்குகிறது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுந்தரராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவியருக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
நாளை மாலை தீவட்டி பரிவாரங்களுடன் சுந்தர ராஜ பெருமாள் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். நாளை மறுநாளும் இதே நிகழ்வு நடைபெறும்.
29-ந் தேதி மாலை 6.15 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி நேர்கம்பு ஏந்தி சகல பரிவாரங்களுடன் கள்ளழகர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். அங்கு 18-ம் படி கருப்பணசாமி முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து கள்ளழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்படாகிறார்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். வழிநெடுகிலும் கிராம மக்கள் கள்ளழகரை வரவேற்று தரிசனம் செய்வார்கள். மறுநாள் 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு மதுரை மூன்று மாவடி பகுதிக்கு கள்ளழகர் வந்தடைவார். அப்போது மதுரை மக்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து அன்று இரவு 8.30 மணிக்கு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந்தருளும் கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அன்று இரவு முழுவதும் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும்.
மறுநாள் (1-ந்தேதி) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலையை சாற்றி கொண்டு கள்ளழகர் வைகை ஆற்றுக்கு புறப்படும் நிகழ்வு நடைபெறும். அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் எதிரே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருகிறார். அதனை தொடர்ந்து தங்க குதிரையில் பக்தர்கள் புடைசூழ வைகை ஆற்றுக்கு புறப்படுகிறார். அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள் கோவிந்தா கோஷம் முழங்க கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
அன்று பிற்பகல் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். மறுநாள் (2-ந் தேதி) காலை வண்டியூர் தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம், கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். அப்போது மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3-ந் தேதி அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் இரவு திருமஞ்சனம் முடிந்து 4-ந் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்படாகிறார். 5-ந்தேதி காலை இருப்பிடம் சேருகிறார்.
கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடையும் வரை வழிநெடுகிலும் 490-க்கும் மேற்பட்ட மண்டக படிகளில் எழுந்தருளுகிறார். இதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.