தமிழக செய்திகள்

#FarmersProtest காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு கைது

அய்யா கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி:

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுக்கு லாபகரமான விலை மற்றும் கோதாவரி காவேரி நதிகளை இணைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இன்று சட்டமன்றத் தேர்தல் காலத்திலும் தடையின்றி கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்திட கோரியும், கடந்த 2 வாரகாலமாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மணிகளை உடனடியாக கொள்முதல் செய்ய கோரியும், நாளை மறுநாள் திருச்சி வருகை தரும் பிரதமர் மோடியை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கை மனு அளிக்க அனுமதி வழங்க கோரியும் திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி திடீர் போராட்டம் நடத்தினர்.

ஓயாமரி மயானம் அருகே காவிரி ஆற்றில் அய்யா கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்த கோட்டை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

அதன் பின்னர் அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் அனைத்து விவசாயிகளையும் வீட்டுக்காவலில் வைத்தனர். வீட்டின் முன்பு 25-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT