தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் 4-ந்தேதி நடைபெற உள்ளது. முதலமைச்சர் விஜய் இதில் கலந்து கொண்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் முதலமைச்சர் விஜய் பங்கேற்று கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகை வழங்க உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தோ்வில் சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் கட்சி தலைவர் விஜய் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறார். இதில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பல்வேறு கட்டங்களாக மாணவர்களுக்கு கல்வி விருது, சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை விருது பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் மேடையில் பேசும்போது, ‘இந்த முறை த.வெ.க. தலைவர் விஜய்யிடம் கல்வி விருது பெறுகிறோம். அடுத்த முறை விருது பெறும் போது முதலமைச்சர் விஜய்யிடம் விருது பெறுவோம்’ என்று பேசினார்கள். அதன்படி கடந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்தது. விஜய் முதலமைச்சர் ஆனார்.
இந்த நிலையில் விஜய் முதலமைச்சர் ஆன பிறகு முதல் முறையாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார். பல கட்டங்களாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக தொகுதிகள் வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகள் மற்றும் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதல் கட்டமாக சட்டமன்ற தொகுதி வாரியாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. சார்பில் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தில் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலையில் நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ -மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகளை முதலமைச்சர் விஜய் வழங்க உள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன் இன்று த.வெ.க. தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டது. 5 மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் விழாவில் பங்கேற்பதற்கான டோக்கன்களை அமைச்சர் என்.ஆனந்த் வழங்கினார்.
இந்த டோக்கன்களை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், விருது பெற உள்ள மாணவ -மாணவிகளை சந்தித்து வழங்குகிறார்கள். இந்த விருது வழங்கும் விழாவில், விருது பெற உள்ள மாணவ-மாணவிகளுடன் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
மேலும் விருது பெறுவதற்காக மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட செயலாளர்கள் தொடங்கியுள்ளனர். விருது பெறும் மாணவ-மாணவிகளையும், அவர்களின் பெற்றோர்களையும் சென்னைக்கு அழைத்து வருவதற்கு தனி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை வந்ததும் அவர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் நொறுக்கு தீனிகளும் வழங்கப்பட உள்ளன. முதல் கட்ட விருது வழங்கும் விழா வருகிற 4-ந்தேதி நடைபெறும் நிலையில், தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது கட்டமாக விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற விழாக்களில் த.வெ.க. தலைவராக விஜய் கல்வி விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், இந்த ஆண்டு முதலமைச்சராக விருது வழங்க உள்ள விஜய்யை காண 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் ஆர்வமாக உள்ளனர்.