தாராபுரம் வேட்பாளர் சத்யபாமா பேசியதாக கூறப்படும் வீடியோவின் அடிப்படையில் தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்டின் எம்எல்ஏ வலியுறுத்தினார். செலவின கணக்கில் முறைகேடு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா பேசியதாக வீடியோ பரவுகிறது. அதில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பிரசாரத்திற்கும், ரூம் புக் செய்யவும் பல லட்சம் செலவு செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
தாராபுரம் சத்யபாமாவின் செலவுக்கணக்கை தாக்கல் செய்திருக்கிறாரா ?. அப்படி தாக்கல் செய்யவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக செலவழித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்.
வீடியோவில் பேசியது நான் தான் என்றும் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியாயப்படி பார்த்தால் அதற்காக அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.