தமிழக செய்திகள்

பயணிகளே கவனம்..! அரசுப் பேருந்துகளில் இனி 'நோ சவுண்ட்'!

அரசு பேருந்துகளில் செல்போனில் சத்தமாக பேசவோ, வீடியோ ரீல்ஸ் பார்க்கவோ தடை விதித்து போக்குவரத்துத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் பலர் செல்போனில் பாட்டு கேட்பது, வீடியோ படம் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் சிலர் ஹெட்போன், இயர்போன் மூலம் இசை கேட்பார்கள். ஆனால் ஒரு சிலர் செல்போனில் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பது அல்லது படம் பார்ப்பது உண்டு. செல்போனில் பேசும் போது கூட மிகவும் சத்தமாக பேசுவதை காண முடியும். இது சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சில சமயங்களில் அரு கருகே இருக்கும் பயணிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுவிடும்.

இதுபோன்ற தகராறுகள் பஸ்களில் நடைபெறாமல் இருக்க பஸ்களில் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து கழக செயலாளர் நிர்மல்ராஜ், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சத்தமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்:

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிகள் பயணிக்கும்போது, மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-ன் விதி 5(10)-ன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-ன் படி, சக பயணி களுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாகக் கருதப்படும்.

இதில் கைபேசியில் பயணம் முழுவதும் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்போன், ஹெட்போன் இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலியில் வீடியோ படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

இயர்போன், ஹெட்போன் மூலம் பாடல்:

‘புளூடூத்’ அல்லது இயர்போன், ஹெட்போன் பயன்படுத்தி சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும்.மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்கு வரத்துக் கழகங்களிலும் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள்:

பேருந்தினுள் பயணிகள் எளிதில் பார்க்கும் வகையில் 'கைபேசியில் 'ஸ்பீக்கர் ஒலி' வேண்டாம் - அமைதியான பயணம், பாதுகாப்பான பயணம்" என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பேருந்துகளில் ஒட்டுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான அறிவுறுத்தல்:

பேருந்தைக் கிளப்பும் முன்பும், பயணத்தின்போதும் பயணிகள் இந்த நடைமுறையைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் உறுதி செய்து அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பலர், தங்கள் கைபேசியில் சத்தமாக ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதும், உரத்த குரலில் பேசுவதும் அதிகரித்துள்ளதாகக் கடலூர், சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போக்குவரத்துத் துறைக்குத் தொடர் புகார்கள் வந்தன. அமைதியான மற்றும் அசவுகரியமில்லாத பயண அனுபவத்தை உறுதிசெய்யும் பொருட்டு போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.