கோவை பொள்ளாட்சியில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாடு, அந்த இயக்கத்தில் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் தவெக குறித்து பேசிய அண்ணாமலை.,
“இது அரசியல் மாநாடு இல்லை. இன்னொரு கட்சியை திட்ட, இன்னொரு தலைவனை குறைசொல்ல இந்த மாநாடு இல்லை. ஆட்சிக்கு ஒருவர் வந்துள்ளார், அவருக்கு இடையூறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு இல்லை.
இந்த மாநாடு போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கை கொண்டு வந்துள்ளது. நிறையபேர் கேட்கிறார்கள், தவெகவை வெளுத்துவிட சொல்லி.
2026-ல் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஓட்டுப்போட்டு இந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளார்கள். அதற்கு மரியாதை கொடுக்கவேண்டியது நமது கடமை. இவர்கள் யாரும் அனுபவ எம்.எல்.ஏக்கள் கிடையாது. செங்கோட்டையனைத்தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சர்கள்.
புதியவர்களை தூக்கிப் பிடித்துதான் விடவேண்டுமே தவிர, கீழ அழுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆணவத்தோடு இந்த அமைப்பை நாம் ஆரம்பிக்கவில்லை. அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாம் இங்கு இல்லை.
நல்ல சமுதாயம், நல்ல தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இங்கு இருக்கிறோம். விஜய்யை இனிமேல் சிஎம் சார் எனவே அழைப்போம். அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதாவது கல்லூரி, பள்ளிகள், கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என தெரிவித்தார்.
717 கடைகளை மூடியதாகவும் அறிவித்தார். ஆனால் நாம் செய்த கள ஆய்வில் இன்னும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் 100 மீட்டருக்குள் உள்ளது. இதையும் பேசுங்கள். இந்த அமைப்பு மூலம் ஒரு அரசுக்கு அழுத்தம் கொடுப்பதைவிட, ஆரோக்கியமான வழியில் அதை வலியுறுத்த வேண்டும்.
ஆணவத்தோடு யார் அரசியல் செய்தாலும், அவர்களை தமிழ்நாடு மண் விடாது என்பதற்கு 2026 தேர்தல் சாட்சி. அதனால் நம் வேலையை செய்வோம். நமக்கு எந்த குழப்பமும் வேண்டாம். இது கண்டிப்பாக ஆரோக்கியமான அரசியல் கட்சியாக மாறத்தான் போகிறது.
2031-ல் தமிழ்நாடு மக்கள் முன்பு நம் கட்சி நிற்கும். ஆரோக்கியமான அரசியலுக்காக நிற்போமேதவிர, அற்ப, அதிகார அரசியலுக்காக அல்ல. இன்னும் சிறப்பாக காட்டுவோம், சிறப்பாக கொடுப்போம் என்ற அரசியலைத்தான் செய்வோம். அதற்கான வாய்ப்பை மக்கள் தருவார்கள்.
இந்த தவெக அரசு முடியும்போது தமிழ்நாட்டின் கடன் ரூ.15 கோடியாக இருக்கும். அதனை நாம்தான் தீர்க்கப் போகிறோம். ” என தெரிவித்தார்.