தமிழக செய்திகள்

அதிமுக அரசு அமைந்த உடன் குடும்பத்திற்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும்- உடுமலை ராதாகிருஷ்ணன் வாக்குறுதி

மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி உடுமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். நேற்று அவர் உடுமலை குடிமங்கலம் பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது, அதிமுக அரசு கொண்டுவந்த பல திட்டங்கள் திமுக அரசு நிறுத்திவிட்டது. மத்திய அரசு தமிழகத்திற்கு முழு நிதி உதவி செய்ய தயாராக உள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும். திமுக அரசு சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, குப்பை வரி மற்றும் அரிசி விலையை உயர்த்தி விட்டது. இதனால் ஒவ்வொரு குடும்பமும் அவதிக்குள்ளாகியது.

அதிமுக அரசு அமைந்த உடன் குடும்பத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். கோவில்களை புனரமைக்க ரூபாய் 5 லட்சம் நிதி உதவி செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடனும் விவசாயிகளின் பயிர் கடனும் ரத்து செய்யப்படும். இருசக்கர வாகனம் வாங்க முதல் கட்டமாக ரூபாய் 5 லட்சம் மகளிர்க்கு ரூபாய் 25 ஆயிரம் மானியம் கொடுக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி உடுமலை நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உடுமலை தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செ.ம வேலுச்சாமி மற்றும் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது உடுமலை நகர செயலாளர் ஹக்கீம் உள்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்‌.