கொலை சம்பவம் நடந்த வீட்டின் முன்பு போலீசார் விசாரணை  
தமிழக செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே மனைவி, கள்ளக்காதலன் தலையில் பாறாங்கல்லை போட்டு கொலை- கணவர் வெறிச்செயல்

இருவரும் தங்களுக்கு திருமணமாகி பிள்ளைகள் இருப்பதை மறந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை சிறைக்கு சென்ற நிலையில் அவர்களது 3 குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி கொத்தனார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 26). கட்டிட தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னழகு (22) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது.

கணவரின் நண்பர்

இந்த தம்பதிக்கு முகேஷ் (5), முகிலன் (3), ஹர்சிதா (2) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். சரவணக்குமார் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களுக்கும் காண்டிராக்ட் அடிப்படையில் கட்டுமான பணிகளுக்காக சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒருசில சமயங்களில் இதற்காக அவர் தான் வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கியும் இருந்து வந்துள்ளார்.

அதே பாலையம்பட்டி யாதவர் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஆனந்தராஜ் (30). இவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் திருமணமாகி காஞ்சனா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சரணக்குமாரும், ஆனந்த ராஜூம் நண்பர்களாக இருந்துள்ளனர். அடிக்கடி மது அருந்தவும் ஒன்றாக சென்றுள்ளனர்.

கள்ளக்காதல்

இதற்கிடையே பாலையம்பட்டி கொத்தனார் காலனியில் வசித்து வரும் தனது தாயாரை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் அவ்வப்போது அங்கு சென்று வந்துள்ளார். அப்போது சரவணக்குமாரின் மனைவி பொன்னழகுக்கும், ஆனந்தராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது கணவரின் நண்பர் என்பதுடன், ஆனந்தராஜூம் கட்டிட வேலை பார்த்து வருவதால் அவரை வீட்டிற்குள் அழைத்து பேசி, பழகி வந்துள்ளார். நாளடையில் அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாகி அதுவே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் தங்களுக்கு திருமணமாகி பிள்ளைகள் இருப்பதை மறந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் பொன்னழகுவின் கணவர் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் போதெல்லாம், அவர் ஆனந்தராஜை தனது வீட்டிற்கு வரவழைத்து கணவன், மனைவி போல் குடித்தனம் இருந்துள்ளனர். இதனை கண்காணித்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி சரவணக்குமாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

கணவர் கண்டிப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். அதேபோல் ஆனந்தராஜையும் அழைத்து இனிமேலும் இதுபோன்று நடந்துகொண்டால் கொலை செய்துவிடுவேன் என்று கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால் கள்ளக்காதல் ஜோடி அதனை கண்டுகொள்ளவில்லை. எப்போதாவது இருந்த அவர்களுக்கிடையேயான உறவு நாளுக்கு நாள் மிகவும் நெருக்கமானது.

கணவரை வேலைக்கும், பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு கள்ளக்காதலனுடன் பொன்னழகு குடும்பம் நடத்தியது அந்த பகுதி முழுவதும் அறிந்த ஒன்றாகிவிட்டது. இதையடுத்து கோபத்தின் உச்சிக்கே சென்ற சரவணக்குமார் செய்வதறியாது தவித்து வந்தார். இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் சரவணக்குமார் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மனைவி பொன்னழகும், கள்ளக்காதலன் ஆனந்தராஜூம் ஒன்றாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கொலை

பின்னர் வீட்டில் இருந்த கைக்கும் கிடைத்த பொருட்களை கொண்டு இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். ஆனாலும் ஆத்திரம் தீராத சரவணக்குமார், மனைவி மற்றும் கள்ளக்காதலனை அங்கிருந்த பாறாங்கல்லை எடுத்து தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்தார்.

இதைப்பார்த்த வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள் 3 பேரும் எழுந்து பயத்தில் அலற தொடங்கினர். உடனே அருகில் வசிப்பவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, அங்கு பொன்னழகு, ஆனந்தராஜ் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் கொலையுண்ட இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சரவணக்குமாரை தேடினர். இதற்கிடையே மனைவி, கள்ளக்காதலனை கொன்ற சரவணக்குமார் என்ன செய்வதென்று தெரியாமல் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் இன்று காலை சுற்றிக்கொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்ட போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

தாய் கொலை செய்யப்பட்டு, தந்தை சிறைக்கு சென்ற நிலையில் அவர்களது 3 குழந்தைகள் தவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT