தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அருணாச்சலம் (வயது29). இவர் தூத்துக்குடி லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 18-ந்தேதி சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்பட்ட புகாரின் பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் பிடித்தனர். பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்தார். அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையில் இருந்தபோது அருணாச்சலத்தை அவரது நண்பர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் 3 போலீசார் தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அருணாசலத்தின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் இன்று காலை அருணாச்சலம் திடீரென இறந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்களில் அவர் இறந்ததால் அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் தாக்கியதால் தான் அருணாச்சலம் இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் திரண்டனர்.
அருணாச்சலத்தை தாக்கிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி அருணாச்சலம் மயங்கி விழும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 17ம் தேதி காவல் நிலைய சிசிடிவியில் பதிவான வீடியோ வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், அருணாச்சலம் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தபோது மயங்கி விழும் காட்சி இடம்பெற்றுள்ளது.
கம்பிகளை பிடித்தபடி பாதி கால்கள் மடங்கிய நிலையில் அருணாச்சலம் மயங்கி விழுவதும் போலீசார் உள்ளே ஓடுவதும் பதிவாகி உள்ளது.