தமிழக செய்திகள்

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது: தேவையற்ற சமூக ஊடகப் பதிவுகளை தவிர்க்க வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்!

மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த அதே நாளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷே காவல்துறை இன்று கைது செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

“23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் என். காமினி, மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.

விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர்.

மேலும், POSH சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT