நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, வரும் சனிக்கிழமையன்று (அக்.24) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
“தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்ட வேட்பாளரும், மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான மு.கார்த்திகா, அவரது கணவரும், தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளருமான முருக.சந்திரகுமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.மதிவாணன் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்து சிறைப்படுத்தியிருக்கும் தவெக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின் பேரில், வருகின்ற ஐப்பசி 07ஆம் நாள் 24-10-2026, சனிக்கிழமை காலை 10 மணியளவில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கிறது.
இக்கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.