தமிழக செய்திகள்

அதிமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிடும் ஆம்ஸ்ட்ராங் மனைவி... பா.ரஞ்சித் ஆதரவு!

ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அதிமுக கூட்டணியில் திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு இயக்குநர் பா.ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.

கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.

ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். ஆம்ஸ்ட்ராங்மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.

தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது.

இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கடந்த 2011 தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.