விபத்தினால் கைகளை அசைக்க முடியாமல் போன ஆட்டோ ஓட்டுனருக்கு தண்டுவடத்தை மின் அதிர்வு மூலம் தூண்டும் சிகிச்சை வழங்கி மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்.
வேலூரை சேர்ந்த 30 வயது ஆட்டோ ஓட்டுநருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தை தொடர்ந்து இரண்டு கால்களும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதோடு, முழங்கைக்கு கீழ் கைகளை அசைக்கும் திறனும் பாதிக்கப்பட்டது.
இதனை குணப்படுத்த அவர் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் என்ற தனியார் மருத்துவமனையை அணுகினார்.
கைகளில் தொடு உணர்ச்சி இருந்தபோதும் அவற்றை அசைக்கும் திறன் இல்லாமல் போனது பற்றி மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு 'ASIA Grade B' என்ற ஒரு வகை தண்டுவடப் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதன்படி பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கீழ் தொடு உணர்ச்சி மட்டுமே இருக்கும். ஆனால், இயல்பான தசை இயக்கச் செயல்பாடுகள் முற்றிலும் செயலிழந்துவிடும்.
இந்நிலையில் இந்த நிலையை குணப்படுத்த எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவர்கள் அவருக்கு Spinal cord stimulation electrode implantation என்ற சிகிச்சையை மேற்கொண்டனர்.
மனித உடல் உறுப்புகளின் இயக்கம் முதுகில் உள்ள தண்டுவடத்துடன் இணைந்தது ஆகும்.
எனவே மின்சாரம் மூலம் நோயாளியின் தண்டுவடத்தை தூண்டி அசைவுகளை மீட்டெடுக்கும் முயற்சியாக இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிகிச்சை பற்றி எம்ஜிஎம் நரம்பியல் அறுவைசிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரூபேஷ் குமார் கூறுகையில்,
"இந்தச் சிகிச்சையின் போது தண்டுவடத்தில் Electrodes எனும் சிறிய மின்முனைகள் பொருத்தப்படும்.
அவை கட்டுப்படுத்தப்பட்ட மின் தூண்டுதல்களை வழங்கி, தண்டுவடத்தின் செயல்பாட்டைச் சீரமைத்து, பாதிக்கப்பட்ட பகுதியின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் மீள உதவும்.
சிகிச்சையின்போது நோயாளியின் பாதிக்கப்பட்ட கை செயல்பாடுகளுடன் தொடர்புடைய தண்டுவடப் பகுதியில் இந்த மின்முனைகள் பொருத்தப்பட்டன" என தெரிவித்தார்.
அந்த மின்முனைகள் மூலம் தண்டுவடம் தூண்டப்பட்டு அளிக்கப்பட்ட spinal cord stimulation சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் கை தசைகளில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவரது கைகளின் இயக்கம் பூரண குணமடைய மேலும் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.