டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் சில இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இன்று பிற்பகல் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பாகப் பிரபல ராப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று பிற்பகல் சுமார் 12:30 மணியளவில் பாடகர் அறிவு தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றார். "நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், இதுகுறித்துத் தமிழக முதல்வர் பேச வேண்டும்" எனப் பலத்த கோஷங்களை எழுப்பினார்.
அனுமதியின்றித் தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டம் நடத்தியதால், அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்குச் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்த பாடகர் அறிவைக் காவல்துறையினர் கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பாடகர் அறிவு கைது செய்யப்பட்ட விபரம் அறிந்த சில நிமிடங்களிலேயே, தமிழக முதல்வர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். "கைது செய்யப்பட்ட பாடகர் அறிவை உடனடியாகத் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வாருங்கள்" என முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று, அறிவை ஏற்றிச் செல்லப்பட்ட அதே போலீஸ் வாகனத்திலேயே அவரை மீண்டும் தலைமைச் செயலகத்திற்குப் பலத்த பாதுகாப்புடன் ஏற்றி அனுப்பினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. நீட் தேர்வுக்கு எதிராகத் டெல்லி மற்றும் தமிழகத்தில் நடக்கும் மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்தும், மாநிலத்தின் கல்வி உரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்தும் முதல்வரிடம் அறிவு விரிவாக எடுத்துரைத்தார் என்ற செய்தியும் தெரிவந்துள்ளது.
போராட முயன்ற கலைஞர் ஒருவரைத் தடுத்துக் கைது செய்யாமல், உடனே நேரில் அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்த முதல்வர் விஜய்யின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் தற்போதைய டிரெண்டிங் டாபிக்காக மாறி இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.