ஆரல்வாய்மொழி அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை புகுந்து அங்கு மேய்ச்சலில் இருந்த மாட்டை கடித்து கொன்று விட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மலையோர கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி வன விலங்குகள் புகுந்து கால்நடைகளை தாக்கி வருகின்றன. இதில் குறிப்பாக யானை, சிறுத்தை போன்றவை ஊருக்குள் வந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செண்பகராமன்புதூர் பகுதியில் சிறுத்தையை பார்த்ததாக பலரும் கூறினர். ஆனால் வனத்துறை, அது காட்டுப்பூனை என தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை புகுந்து அங்கு மேய்ச்சலில் இருந்த மாட்டை கடித்து கொன்று விட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி அருகே காணியாம்மான் கோவில், வாணிபொத்தை பூதப்பாண்டி வனச்சரகபகுதி. ஆரல்வாய் மொழியில் உள்ள மிசின் காம்புவண்ட், வில்லவிளை, வடக்கூர், நெசவாளர் காலணி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தங்களது மாடுகள், ஆடுகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி மிசின்காம்புவண்ட் ஜாண்சன் (59) தனது மாடுகளை வாணிபொத்தைபகுதியில் மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.
அதில் ஒரு மாடு மாலையில் வீடு திரும்பதாததால் அதனை தேடிச் சென்ற போது தான் சிறுத்தை புலி கடித்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனால் அந்த பகுதி விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாணிபொத்தை பகுதி சிறுவர்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதி என்பதால் வனத்துறை விரைந்து செயல்பட்டு சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.