தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிரமடைந்து 'முரசு' எனும் சூறாவளியாக மாறியுள்ளது.
காலை 11.30 நேரப்படி, இது சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 560 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கே-தென்கிழக்கே 630 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு கிழக்கே-தென்கிழக்கே 680 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை மத்திய-மேற்கு வங்கக் கடலில் 'தீவிர சூறாவளி புயலாக' வலுவடையக்கூடும்.
இந்நிலையில், முரசு புயலை கரையை நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
முரசு புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்கள் மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின்கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.
குடிநீர், மருந்துகள், டார்ச் லைட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைத்திருக்கவும்.
அவசர உதவிக்கு மாநில அளவில் 1070 என்ற எண், மாவட்ட அளவில் 1077 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.
வரும் நவம்பர் 4ம் தேதி காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும்.
மேலும், கடற்கரை மற்றும் கடலோரச் சாலைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
பதற்றமடையாமல் விழிப்புடன் இருக்க வேண்டும், அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.