சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக த.வெ.க. எம்.எல்.ஏ. ரேவந்த் சரண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மதுரவாயல் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.
சென்னை பெருநகரப் பகுதிக்கான திட்டமிடல், வளர்ச்சிப் பணிகள், கட்டிட அனுமதி மற்றும் நிறைவுச் சான்றிதழ் வழங்குதல் இதன் முதன்மையான பணியாகும். தலைமையகம் சென்னை எழும்பூரில் உள்ளது. தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மட்டுமின்றி, அதன் புறநகர் பகுதிகளிலும் நகர்ப்புற வளர்ச்சியை வழிநடத்திச் செல்வது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் உள்பட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 5,904 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதிகளில் நிலப்பயன்பாடு, கட்டுமானங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிப்பது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தான்.
1972-ஆம் ஆண்டில் மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு 54 ஆண்டுகளாக நிதி நிலையில் தற்சார்புடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் இந்த அமைப்பின் நிதிநிலை மிக மோசமாக சீரழிக்கப்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.