தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் 11 அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், 3 அரசு உதவிப்பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரிகள், 16 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், மத்திய அரசின் 3 பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகார இணைவு பெற்று இயங்கி வருகின்றன.
2025-26-ம் கல்வி ஆண்டின் தரவுகள்படி 89 தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், 368 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் இயங்கி வருகிறது.
இந்தக் கல்லூரிகளில் பி.இ. பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் உள்ள இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக் குழு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் பெற்று, கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கையை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.
அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு என்ஜினீயரிங் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கி உள்ளது. 12-ம் வகுப்பு முடித்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம், கலந்தாய்வு உள்ளிட்ட விவரங்களை www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்து கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது.
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய ஜூன் 6-ந்தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 5-ந்தேதி வெளியிடப்படும். தொடர்ந்து ஜூன் 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை இணையதளம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
இதை தொடர்ந்து ஜூன் 29-ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இணையதள வசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதன் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி 10 இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அழைப்பு எண்: 1800-425-0110.
மேலும், மாணவ-மாணவிகள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு (2025) கலந்தாய்வில் பங்கேற்ற கல்லூரிகளின் எண்ணிக்கை 443, மொத்த இடங்களின் எண்ணிக்கை 2,54,585. மாணாக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 2,20,841. இது, இதற்கு முந்தைய ஆண்டை (2024) விட 23.67 சதவீதம் அதிகம் ஆகும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்கக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.