நாகப்பட்டினத்தில் உள்ள ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 2026-27 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிற்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்படுகிறது என துணைவேந்தர் முனைவர் நா. பெலிக்ஸ் அறிவித்துள்ளார்.
விண்ணப்பிற்கும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டும். மேலும், அதிகளவிலான மாணவர்களை மீன்வளப் பட்டப்படிப்புகளுக்கு ஈர்க்கும் வகையிலும் முதலில் 14.06.2026 என அறிவிக்கப்பட்டிருந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதி, தற்போது 23.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி, நீட்டிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு துணைவேந்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் 24.06.2026 முதல் 28.06.2026 வரை விண்ணப்பத்தைத் இணையவழியாக திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஏற்கனவே விண்ணப்பித்த தரவுகளின் விவரங்களை சரிபார்த்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக, அலுவலக வேலை நேரமான காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கைபேசி 81221 44031 மற்றும் தொலைபேசி 04365 - 211090 எண்களிலோ அல்லது admissionug@tnjfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்புகொள்ளலாம் என்றும்,
சேர்க்கை தொடர்பான அறிவிப்புகள் பற்றி அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடுமாறும் துணைவேந்தர் முனைவர் நா. பெலிக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.