தமிழக செய்திகள்

மின்வாரியத்தில் முறைகேடு: தமிழகத்தில் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னையில் 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சாதனங்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தி.மு.க. ஆட்சியில் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது தான் இந்த குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தன.

அதிரடி சோதனை

இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மின்வாரியத்துக்கு தேவையான பொருட்கள் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு தொழில் பேட்டைகளில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

மின்சாதனப் பொருட்கள் வாங்கியதில் தான் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அது தொடர்பான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் இந்த சோதனை நடந்து உள்ளது.

சென்னை

சென்னையில் 27 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அண்ணாநகரில் 3 இடங்களிலும், பெருங்குடியில் 4 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இதை தவிர மின்வாரியம் தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் வளாகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.

சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

14 தொழிற்சாலைகள்

அதில் ஏராளமான மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் அடங்கும். இந்த தொழிற்சாலைகளில் இருந்து மின்வாரியத்துக்கு தேவையான பொருட்கள் பெருமளவு வாங்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து இங்கு உள்ள ஆனந்த் எலக்ட்ரிக்கல் நிறுவனம் உள்பட மொத்தம் 14 தொழிற்சாலைகளில் இன்று சோதனை நடைபெற்றது. இந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொது மேலாளர்களின் இல்லங்கள் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 17 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆனந்த் எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் டி.எஸ்.பி. ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் தமிழரசி, மாலா ஆகியோர் சோதனை நடத்தினார்கள். இதுபோன்று மற்ற 13 இடங்களிலும் டி.எஸ்.பி. தலைமையில் சோதனை நடந்தது.

தொழிற்சாலை மற்றும் நிறுவன அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றையும், கோப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

சில தொழிற்சாலைகள் காலை வேளையில் திறக்கப்படாத நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் நுழைவாயிலில் தொழிற்சாலை நிர்வாகிகளின் வருகைக்காக காத்திருந்து உள்ளே சென்றதையும் காண முடிந்தது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்திலும் இந்த சோதனை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

இதை தவிர திருச்சி, கரூர், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் மின்வாரியம் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் சிப்காட் வளாகங்களில் இன்று காலை 7.30 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். டிரான்ஸ்பார்மர்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படும் அலுமினியப் பொருட்களை கொள்முதல் செய்ததில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று உள்ளது.

ஒப்பந்தங்கள்

மின்வாரியத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை பெறுவதற்கு ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக பணம் செலுத்தி அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்படி மின்சாதனப் பொருட்கள் வாங்கப்பட்டதில் எந்த மாதிரியான பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்பது பற்றிய தகவல்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திரட்டியுள்ளனர்.

தொடர் சோதனை

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் ஆட்சியில் அமர்ந்த பிறகு கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சோதனையும் நடந்து உள்ளது. இந்த நிலையில் தான் மின்வாரியத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT