தமிழக செய்திகள்

மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் - வேடசந்தூரில் பள்ளி குடிநீர் தொட்டியில் மலக்கழிவு?

இன்னும் வேங்கைவயல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேடசந்தூர் அருகே அய்யலூர் பகுதியில் உள்ள தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாணவர்கள் தண்ணீர் குடிக்க சென்றபோது, தண்ணீரில் துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனையடுத்து தொட்டியின் உள்ளே பார்த்தப்போது தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் சுற்றப்பட்டு கிடந்துள்ளது. மேலும் அதில் ஒரு எச்சரிக்கை குறிப்பும் இருந்துள்ளது.

இதனைப் பார்த்த மாணவர்கள் உடனடியாக ஆசியர்களிடத்தில் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையினரிடம் தெரிவிக்க வடமதுரை போலீசார் வந்து சம்பவ இடத்தில் பார்வையிட்டு, விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும் திண்டுக்கல் எஸ்.பி.ஜெயக்குமாரும் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு வேங்கைவயலில் இதேபோல அரங்கேறிய சம்பவத்திலேயே இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாதநிலையில், மீண்டும் அதேபோன்ற கொடூர நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

வேங்கைவயல் வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வன்கொடுமை சம்பவம் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பவர் மாதம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கில் முரளி ராஜா, சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பிறகு, சிபிசிஐடி போலீசார் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை அளித்து நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். ஆனால் தற்போதுவரை வரை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை.