தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம் - உச்சநீதிமன்ற நீதிபதியான வி.மோகனாவுக்கு வைரமுத்து புகழாரம்

உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் ஒரு பானுமதிபோல் இந்நாள் ஒரு பெண்ணாள் பெருமை சூடுகிறார்.

கோவை சட்டக்கல்லூரியில் பயின்ற தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி. மோகனா நேற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார்.

வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இந்தியாவின் இரண்டாவது பெண்மணி மற்றும் தமிழகத்தின் இரண்டாவது பெண் உச்சநீதிமன்ற நீதிபதி என்ற சாதனையையும் இவர் படையுளார்.

இந்நிலையில் கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து மோகனா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், "தமிழ்நாட்டின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம் கிட்டியிருக்கிறது.

இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு முன்னாள் ஒரு பானுமதிபோல் இந்நாள் ஒரு பெண்ணாள் பெருமை சூடுகிறார். கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகனா அவர்கள் உச்ச நீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதியாக பதவியேற்கிறார்

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொண்டு அறிவில் ஓங்கி வையம் தழைக்கட்டும் என்று பெண்மை வாழ்கவென்று கூத்திடுகிறது நெஞ்சு. தான் தமிழச்சி என்னும் உணர்வு அறத்தின் வட்டத்தில் அவருக்கு இருக்காது.

ஆனால், இனத்தின் வட்டத்தில் எங்கள் தமிழச்சி என்ற பெருமிதம் எங்களுக்கிருப்பதைத் தடுக்க முடியாது

மாண்பமை நீதிபதி அவர்களுக்கு எமது வணக்கமும் வாழ்த்தும்" என்று தெரிவித்துள்ளார்.