புறநகர் மின்சார ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் சைலேந்திர சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2025-26 நிதி ஆண்டில் ரூ.5,038 கோடி மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 9.26 சதவீத கூடுதல் வளர்ச்சி ஆகும். சென்னை கோட்டம் 43.2 98 கோடி பயணிகளை ஏற்றி சென்றதுடன் 11.3 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு 6.20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் 3559 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதுடன் 1557 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. கிளாம்பாக்கம் ரெயில் நிலைய பணிகள் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் மின்சார ஏ.சி. ரெயில் மற்றொன்று தயார் நிலையில் உள்ளது. அதனை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் ஒரு மாதத்தில் புதிய ரெயில் சேவை தொடங்கும்.
எழும்பூர் ரெயில் நிலைய மறு சிரமைப்பு பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்க திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஒருவேளை 2 மாதம் தாமதமாகலாம். பயணிகளுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 26 ரெயில் நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. 13 ரெயில் நிலையங்களில் புதிதாக வாகனம் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 26 லிப்ட்டுகள், 7 எஸ்கலேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்காக 16 ரெயில் நிலையங்களில் அடிப்படையான வசதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் மின்சார சேவையில் ஆதம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்வதற்கான வசதியில் சில குறைபாடுகள் உள்ளன. வளைவான பகுதி என்பதால் ரெயிலில் இருந்து பயணிகள் நடைமேடையில் ஏறி இறங்குவதில் அதிக சிரமம் உள்ளது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தாம்பரம்- கடற்கரை மின்சார ரெயில் இயக்கத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சேத்துப்பட்டு நிலையத்தில் சிக்னல் காரணமாக ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தப்படுகிறது. பாஸ்ட் மின்சார ரெயிலுக்காக மற்ற மின்சார ரெயில்களை நிறுத்துவதால் ஏற்படும் சிரமங்கள் தெரியவந்துள்ளன. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின் போது கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.