தமிழக செய்திகள்

உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, முரசு புயல் எதிரொலியால் ராட்சத அலைகளில் சிக்கி சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;

“தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்கு,

காசிமேடு மீனவர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம்: மீனவர்களின் பாதுகாப்பில் புதிய அணுகுமுறையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உரிய வாழ்வாதார உத்தரவாதமும் அவசியம்!

உயிரிழந்த ஒவ்வொரு மீனவரின் குடும்பத்திற்கும் தலா 50 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். இதில், 25 லட்சம் ரூபாயை உடனடி நிவாரணமாக வழங்குவதுடன், மீதமுள்ள 25 இலட்சம் ரூபாயை அந்தந்தக் குடும்பத்தினரின் பெயரில் நீண்டகால வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்.

அந்த வைப்புத் தொகையின் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய், குடும்பத்தின் அன்றாடத் தேவைகள், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வாதாரத்திற்கு நிலையான நிதி ஆதாரமாக அமையும். மேலும், குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதுகாக்கும் வகையில், தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாட்டையும் உருவாக்க வேண்டும்.

உயிரிழந்த மீனவர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான கல்விச் செலவுகளுக்கு அரசு சிறப்பு உதவித்திட்டம் ஒன்றையும் அறிவிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT