கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மவுனத்தை கலைத்து விளக்கம் அளிக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார். அரசு நிகழ்ச்சிகளில் கலெக்டர் பங்கேற்காதது மர்மமாக உள்ளதாகவும், எம்.எல்.ஏ. பிரச்சனை ஏற்படுத்தியிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் கணியூர் அடுத்த சேடர்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் வீ த லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரம் ஒரு பெரிய மர்ம புதிராக தொடர்ந்து கொண்டு உள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்கேற்காமல் இருப்பதை பார்க்கிறோம். ஒரு மாவட்ட கலெக்டராக பெண் இருப்பதே பெருமை. அவருக்கு ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., யாரேனும் பிரச்சனை ஏற்படுத்தி இருந்தால், முதலமைச்சர் மவுனத்தை கலைத்து தாமாக முன்வந்து விளக்கம் அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., மோசமான குறுஞ்செய்தி அனுப்பினாரா, இல்லையா? என்பது எளிய கேள்வி. அனுப்பியிருந்தால் நடவடிக்கை எடுங்கள், இல்லையெனில் அதை வெளிப்படையாக கூறுங்கள். எல்லா விஷயங்களையும் மூடி மறைத்தால் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை ஏற்படும். இது குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சங்கமும் மவுனம் கலைக்க வேண்டும்.
மாற்றத்தை விரும்பி 35 சதவீத மக்கள் தமிழகவெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்து உள்ளனர். ஆனால் தீபாவளியையொட்டி 2 நாட்களில் ரூ.441 கோடிக்கு டாஸ்மாக் மது விற்பனை நடந்து உள்ளது. தீபாவளி அன்று 15 முதல் 17 கொலைகள் வரை நடந்து உள்ளன.
முந்தைய ஆட்சியை குறை சொல்வதை விட்டு விட்டு, காவல்துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும். தீபாவளிக்கு முன்பே ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கலாம். சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்களும் அதிகரித்து உள்ளன. இந்த விஷயத்தில் உள்துறை பொறுப்பை வகிக்கும் முதல்வர் சுதாரித்துக் கொண்டு வேகமாக களத்தில் இறங்க வேண்டும்.
ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் முடிந்து உள்ள நிலையில், ஆட்சியின் நிறை குறைகள் குறித்து ஓராண்டு நிறைவடைந்த பிறகே முழுமையாக பேசுவோம். அதற்குள் எதிர்க்கட்சிகள் பேரம் பேசி எம்.எல்.ஏ.,க்களை இழுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சித்தால், அது எதிர்க்கட்சிகளுக்கே பின்னடைவாக அமையும். ஏற்கனவே இடைத்தேர்தல் குழப்பங்கள் உள்ள நிலையில், மக்கள் வாக்களித்த ஆட்சிக்கு ஓராண்டு காலமாவது தார்மீக அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.