அண்ணாமலை 
தமிழக செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க பா.ஜனதாவில் அதிரடி மாற்றங்கள்- அண்ணாமலை முடிவு

மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதிகளில் வலிமையாகவும், செல்வாக்குடனும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 4 தொகுதிகளை கைப்பற்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு சட்டசபையில் கால்பதித்தது. அடுத்ததாக 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கையை கணிசமாக உயர்த்துவதுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறவேண்டும் என்பதற்காக பா.ஜனதா செயல்திட்டங்களை வகுத்துள்ளது.

அதன் ஒரு கட்டமாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாவட்ட அளவில் கட்சியின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து தேவைப்பட்டால் மாற்றங்களை செய்யவும் மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார்.

சரியாக செயல்படாத 30 மாவட்ட தலைவர்கள் மாற்றப்படலாம் என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. 6 முதல் 8 மாதங்களுக்குள் 60 மாவட்டங்களிலும் கட்சி அமைப்புகளை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

மற்ற கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பிரபலங் கள், பேச்சாற்றல் மிக்கவர்களை பா.ஜனதாவில் இணைக்க முயற்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி மாணிக்கம் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் ஏற்படுத்த போகும் மாற்றங்கள் பற்றி அண்ணாமலை கூறியதாவது:-

கட்சியின் பூத் மட்டத்தில் இருந்து மாநில நிர்வாகிகள் வரை கடுமையாக உழைக்கிறார்கள். எங்களுக்கு இப்போது தேவை வேகமாக ஓடும் குதிரைகள். சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.

மாவட்ட தலைவர்கள் தங்கள் பகுதிகளில் வலிமையாகவும், செல்வாக்குடனும் இருக்கிறார்கள். கட்சியை வலுப்படுத்த பல்வேறு பணிகளை அவர்களுக்கு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.