தமிழக செய்திகள்

கரப்பான்பூச்சி கட்சியினருக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவிப்பதா?- ராம.சீனிவாசன் கேள்வி

ராகுல் காந்தி 13 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளதாக கூறுகிறார். அதில் 2.75 கோடி பேர் இறந்து விட்டனர். 7 கோடி பேர் புலம்பெயர்ந்தவர்கள்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்கள் முத்துக்குமார், சந்திரசேகர், ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்புரை

கூட்டத்தில் ராம.சீனிவாசன் சிறப்புரையாற்றி பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்துக்கு காயிதே மில்லத் மாவட்டம் என்று பெயர் சூட்டிய போது அதை எதிர்த்து நடந்த கூட்டத்துக்கு இந்து முன்னணி தலைவராக இருந்த ராம.கோபாலன் இதே இடத்தில் சிறப்புரையாற்றினார். அந்த எழுச்சியை பார்த்த பிறகுதான் இந்த மாவட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு மீண்டும் திண்டுக்கல் மாவட்டம் என பெயர் வைக்கப்பட்டது. இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போதை பொருட்களின் பயன்பாடு எவ்வாறு இருந்தது? என்பதையும், தற்போது எவ்வாறு ஒழிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சி

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் ஜாபர் சாதிக், த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டது மாநில அரசால் அல்ல. மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள்தான் கைது செய்துள்ளனர்.

போதை பொருள் ஒழிப்பில் தமிழகம், கேரளா மெத்தனமாக செயல்படுகிறது. கஞ்சா செடியை அழித்து தீ வைப்பது போல போதை காளானையும் எரித்து தீ வைக்க வேண்டும். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு 57 லட்சம் டன் கஞ்சா செடிகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஆந்திரா மாநிலங்களில் கஞ்சா பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை

இந்தியாவில் மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு வெடி குண்டு சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் எங்குபார்த்தாலும் குண்டு வெடிக்கும். மோடி, அமித்ஷா ஆகியோர் சேர்ந்து இந்தியாவை வல்லரசாக்க முயன்று வருகின்றனர்.

எஸ்.ஐ.ஆர். பணிகளில் என்ன நடந்தது? என்று அனைவருக்கும் தெரியும். தகுதி இல்லாத ஒருவரை கூட வாக்களிக்க அனுமதிக்க கூடாது. அதைத்தான் எஸ்.ஐ.ஆர். மேற்கொண்டது.

கரப்பான் பூச்சி

ஆனால் காங்கிரஸ் மற்றும் கரப்பான் பூச்சிகள் இதனை எதிர்க்கின்றனர். நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற அண்ணாமலை கூட கரப்பான் பூச்சிக்கு ஆதரவு தெரிவிப்பது வியப்பளிக்கிறது. ராகுல் காந்தி 13 கோடி வாக்காளர்களை நீக்கியுள்ளதாக கூறுகிறார். அதில் 2.75 கோடி பேர் இறந்து விட்டனர். 7 கோடி பேர் புலம்பெயர்ந்தவர்கள். பா.ஜ.க.வுக்கு சாதகமாக எஸ்.ஐ.ஆர். திருத்தம் செயல்பட்டு இருந்தால் கேரளாவிலும், தமிழகத்திலும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இதனை எதிர்கட்சிகள் உணர மறுக்கின்றனர்.

போதை ஒழிப்பை வலியுறுத்தி கன்னியாகுமரியில் தொடங்கிய பேரணி இன்று கோவையில் நிறைவுபெற உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பஸ் நிலையம் முன்பு தொடங்கிய போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் திரளான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT