புதிய கட்சியின் பெயர், கொடியை அண்ணாமலை அடுத்த மாதம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த பதவியில் இருந்து விலக்கப்பட்டார். சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தேர்தல் பிரசாரத்தில் பெரிய அளவில் அண்ணாமலை தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. இந்தநிலையில், கடந்த மாதம் பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை விலகினார்.
தான் ஏற்கனவே நடத்தி வந்த 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை அரசியல் களத்தில் இறக்கினார். ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடத்தினார். முதல் நாளில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர். தொடர்ந்து முகாம் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.
இதற்கிடையே, பொள்ளாச்சியில் கடந்த 12-ந்தேதி அண்ணாமலை நடத்திய மாநாட்டில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து. தூத்துக்குடியில் 2-வது மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான பணிகளில் அவர் முழு வீச்சில் இறங்கியுள்ளார். வரும் ஆகஸ்டு 3-வது வாரத்தில் புதிய கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளார். புதிய கொடியையும் அவர் அறிமுகம் செய்கிறார்.
கட்சியின் பெயர், கொடி அறிமுகத்தை தொடர்ந்து செப்டம்பர் 14-ந்தேதி மதுரை அல்லது திருச்சியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு இருக்கிறார். கட்சியின் பெயர் அறிவிப்பு கூட்டத்திற்கான ஆலோசனை கூட்டங்கள் வரும் வாரங்களில் நடத்தப்பட இருக்கிறது.
இதற்காக தமிழகம் முழுவதும் ‘வீ த லீடர்ஸ்' குழுவினர் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கும் வகையில் அண்ணாமலை புதிய கட்சி தொடக்கம் அமைய இருக்கிறது.