தமிழக செய்திகள்

அண்ணாநகரில் பல் மருத்துவர்- தாய் கொடூரக் கொலை: உடன் பிறந்தவர்களே செய்த அதிர்ச்சிப் பின்னணி!

இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா நகரில் நடந்துள்ள இரட்டை கொலை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறில் பல் டாக்டரும், அவரது தாயாரும் கொடூரமாக கொல்லப் பட்டுள்ளனர்.

பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை அண்ணா நகர் கிழக்கு 1-வது அவென்யூவில் அஷ்ரப் நிஷா குடும்பத்தோடு வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் 3 மகன்களுடன் ஒரே வீட்டில் அவர் இருந்தார்.

இந்த நிலையில் அஷ்ரப் நிஷாவின் இளைய மகனான பல் டாக்டர் அஷ்ரப் அகமதுவுக்கும், அவரது அண்ணன்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது ஆகியோருக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.

கொடூர கொலை

இது தொடர்பாக நேற்று இரவு வீட்டில் வைத்து ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து தொடர்பாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தாய் அஷ்ரப் நிஷா, தம்பி அஷ்ரப் அகமது இருவரையும் அண்ணன்கள் இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி அடித்துள்ளனர். மேலும் கழுத்தையும் நெறித்து இருக்கிறார்கள்.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும் வீட்டிலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர்.

நாடகம்

தாய், தம்பியை அடித்து கொன்றுவிட்டு அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரும் நாடகம் ஆடினார்கள். இன்று காலையில் இருவரும் உயிர் இழந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியது. தாயும், தம்பியும் வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டனர் என்று அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அண்ணாநகர் துணை கமிஷனர் ஈஸ்வரன் மேற்பார்வையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையின்போது சகோதரர்கள் இருவரும் தங்களது தாயும், தம்பியும் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவே தெரிவித்தனர்.

காட்டிக்கொடுத்த காயங்கள்

அஷ்ரப் நிஷாவின் முகம் மற்றும் பல இடங்களில் காயங்கள் இருந்தது. அஷ்ரப் அகமதுவின் இடுப்பு, கைகள், கால்களிலும் பலத்த காயங்கள் காணப்பட்டன. இதைத் தொடர்ந்து சகோதரர்களான அஷ்ஷார் அகமது, அப்ரார் அகமது இருவரிடமும் போலீசார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

இதில் இருவரும் தாயையும், தம்பியையும் சொத்து தகராறில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

கைது

இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை நடந்த வீட்டுக்கு தடயவியல் நிபுணர்களும் நேரில் சென்று தடயங்களை சேகரித்தனர்.

கொலையுண்ட தாய், மகன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சகோதரர்களின் மனைவி, மகன், மகள் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்தில் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டை கொலை சம்பவம் அண்ணாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.