தமிழக செய்திகள்

சீமான் வீட்டுக்கு சீர்வரிசை கொடுத்தது ஏன்?- அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

தங்கச்சங்கிலி மற்றும் சீர்வரிசை தட்டுகளுடன் மேள-தாளங்கள் முழங்க நேற்று முன்தினம் சென்று பெண் குழந்தையை வாழ்த்தினார் அனிதா ராதாகிருஷ்ணன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்- கயல்விழி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவருடைய வீட்டுக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கச்சங்கிலி மற்றும் சீர்வரிசை தட்டுகளுடன் மேள-தாளங்கள் முழங்க நேற்று முன்தினம் சென்று பெண் குழந்தையை வாழ்த்தினார்.

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளான நிலையில் சீமான் வீட்டுக்கு சீர்வரிசை எடுத்து சென்றது ஏன்? என்பது குறித்து தகவலை அனிதா ராதாகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவிடம் (கயல்விழி தந்தை) சிறுவயதில் இருந்து நான் பழகியவன். எனவே சீமான் மனைவியிடம் சிறுவயதில் இருந்து தங்கச்சியாக பழகி இருக்கிறோம். அந்த தங்கச்சிக்கு பெண் குழந்தை காளி பிறந்திருக்கிறது. இது உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக சகோதரனாக இருந்து சீர் கொண்டு சென்றேன். இதற்கு எல்லோரும் வாழ்த்தினார்கள். எங்களுடைய தலைவரும் நன்றாக வாழ்த்தினார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.