தமிழக செய்திகள்

பெற்றோருடன் கோபம்... ரூ.1,000 எடுத்துக்கொண்டு சென்னைக்கு ஓட்டம்!- மாயமான கிருஷ்ணகிரி சிறுவன் பத்திரமாக மீட்பு

சிறுவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபரை இரவோடு இரவாக பிடித்து விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாயமான 12 வயது பள்ளி மாணவன், சென்னை புளியந்தோப்பு பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டான்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் பேக்கரி நடத்தி வருபவர் திருநாவுக்கரசு. இவரது மகன் சஞ்சய் (வயது 12).

இவன் அங்குள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை பள்ளி மற்றும் டியூஷன் வகுப்புகள் முடிந்த பிறகு, சஞ்சய் வழக்கம்போல் வீட்டுக்கு புறப்பட்டான்.

அப்போது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சிறுவன் லிப்ட் கேட்டு சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில், சிறுவனை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நபரை இரவோடு இரவாக பிடித்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

சிறுவன் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருந்தனர்.

விசாரணையில், சிறுவன் வீட்டில் இருந்து ரூ.1,000 எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. ஊத்தங்கரையில் இருந்து பஸ் வசதி மட்டுமே உள்ளதால், பஸ் மூலம் அவன் சென்னைக்கு சென்றிருக்கலாம் என போலீசார் கருதினர்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள உறவினர்களை தேடிச் சென்ற சிறுவன், சரியான முகவரி தெரியாததால் புளியந்தோப்பு பகுதியில் வழி தெரியாமல் தவித்து நின்றான். அப்போது, அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பிரகாஷ் என்பவர், சிறுவன் தனியாக நிற்பதை பார்த்து விசாரித்தார்.

அப்போது, ஆட்டோ டிரைவரின் செல்போனை வாங்கிய சிறுவன், தனது தந்தையை தொடர்பு கொண்டு தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்தான். இதையடுத்து, சிறுவனை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைக்குமாறு தந்தை கேட்டுக்கொண்டார்.

அதன்படி, ஆட்டோ டிரைவர் பிரகாஷ், சிறுவனை அருகில் இருந்த புளியந்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.

மகன் சென்னையில் இருப்பது குறித்து பெற்றோர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரணையில், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு சென்னைக்கு வந்ததாக சிறுவன் தெரிவித்தான்.

இதையடுத்து, சென்னை போலீசார் சிறுவன் மீட்கப்பட்ட தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாருக்கும், ஊத்தங்கரையில் உள்ள பெற்றோருக்கும் தெரிவித்தனர்.

சிறுவனை பாதுகாப்பாக சிங்காரப் பேட்டைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, சிறுவனை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT