தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அவர் அந்த மையத்தில் படிக்கும் 2½ வயது பெண் குழந்தை மீது சாக்குப்பையில் போட்டு துன்புறுத்திய சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அங்கன்வாடி பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங், குழந்தைகளை துன்புறுத்திய கலைச்செல்வியை ‘சஸ்பெண்டு' செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை பாதுகாப்பாகவும், நல்ல போதனைகளை வழங்கியும் அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்திட வேண்டும் எனவும், இது போன்ற குழந்தைகள் துன்புறுத்தலில் யாரும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் துன்புறுத்தப்பட்ட குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில் பாவூர்சத்திரம் போலீசார் கலைச்செல்வி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.