தமிழக செய்திகள்

காங்கிரஸ், திமுக எப்போதும் சீர்திருத்தங்களுக்கு எதிராக இருந்து வருகின்றன: கோவை பிரசாரத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கு | TN Election 2026

கோவையில் பிரசாரம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த திமுக, காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

ஆந்திர மாநில முதல்வரும் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இன்று கோவையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

மக்களவையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தோற்கடித்ததற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கை, நாட்டின் மிக முற்போக்கான முடிவுகளில் ஒன்று

காங்கிரஸ், திமுக மற்றும் சில கட்சிகள் சீர்திருத்தங்களுக்கு எப்போதும் எதிர்ப்பாகவே இருந்து வருகின்றன. தமிழ்நாட்டு மக்கள் இந்த கட்சிகளை தோற்கடிக்க வேண்டும். மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறி விட்டது..

நான் உங்களிடம் உறுதியாகச் சொல்கிறேன்; பெண்களுக்காக மோடிஜி செய்திருக்கும் அந்த 33 சதவீத இடஒதுக்கீடு என்பது, நாட்டின் மிக முற்போக்கான முடிவுகளில் ஒன்றாகும். காங்கிரஸ், திமுக மற்றும் பிற அரசியல் கட்சிகள் செய்திருப்பது பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். ஒவ்வொரு பெண்ணும் இது குறித்து விவாதிக்க வேண்டும், கருத்துப் பரிமாற்றம் செய்ய வேண்டும்.

இது ஒரு முற்போக்கான கொள்கையாகும். அவர்கள் (காங்கிரஸ், திமுக மற்றும் பிற கட்சிகள்) இதை எதிர்த்தனர். இப்போது அவர்கள் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் பெண்கள் அதிகாரமயமாற்றத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டார்கள்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.