தமிழக செய்திகள்

717 மதுக்கடைகளை மூடுவதில் தயக்கம் கூடாது - அன்புமணி வலியுறுத்தல்

சட்டவிரோத மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அருகிலுள்ள அரசு மதுக்கடைகளை மூட கடந்த 12-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் ஆணையிட்டிருந்த நிலையில், இதுவரை 150 மதுக்கடைகள் மட்டும் தான் மூடப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள மதுக்கடைகளை மூடும் பணிகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் ஏமாற்றமளிக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித்தலைவரான முதலமைச்சரே ஆணையிட்ட பிறகும் இல்லாத காரணங்களைக் கூறி மதுக்கடைகளை மூடுவதை நிறுத்தி வைப்பதையோ, தாமதப்படுத்துவதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 10-ஆம் தேதி பொறுப்பேற்ற விஜய், அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 186 மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 276 மதுக்கடைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள 255 மதுக்கடைகள் என மொத்தம் 717 கடைகளை மூடும்படி கடந்த 12-ஆம் தேதி ஆணையிட்டார். முதலமைச்சரின் ஆணைப்படி 717 மதுக்கடைகளும் அடுத்த இரு வாரங்களில், அதாவது வரும் 26-ஆம் தேதிக்குள் மூடப்பட வேண்டும்.

ஆனால், முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து 150 மதுக்கடைகள் வேகமாக மூடப்பட்ட நிலையில், மீதமுள்ள 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் மூடப்படவில்லை. அவற்றை மூடுவதில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், அவை தீரும் வரை மதுக்கடைகளை மூடும் பணி நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதாகவும் டாஸ்மாக் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூடப்பட்ட மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகள் அனைத்தும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்குள் உள்ளனவா? என்பதை அளந்து தீர்மானிக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தான் அந்தக் கடைகளை மூடுவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதுக்கடைகளை மூடுவதற்காக இது போன்ற இல்லாத காரணங்களை அதிகாரிகள் கூறுவது முதலமைச்சரின் நோக்கத்திற்கு எதிரானது.

தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை முதலமைச்சர் விஜய் தன்னிச்சையாக வெளியிடவில்லை. கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகிய இடங்களில் இருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள மதுக்கடைகளை அடையாளம் காணும்படி முதலமைச்சர் விஜய் ஆணையிட்டதாகவும், அதன்படி தான் 717 மதுக்கடைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அவ்வாறு இருக்கும் போது, மூடப்பட்ட 150 மதுக்கடைகள் தவிர மீதமுள்ள மதுக்கடைகள் 500 மீட்டர் சுற்றளவுக்குள் வருகின்றனவா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என டாஸ்மாக் தரப்பில் கூறப்படுவது நியாயமல்ல. அப்படியானால், 717 மதுக்கடைகளை மூடலாம் என முதலமைச்சருக்கு பரிந்துரை செய்தவர்கள் யார்? அவர்கள் தவறான தகவல்களை அளித்தார்களா? என்பதை டாஸ்மாக் நிர்வாகம் விளக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் கடந்து, மதுக்கடைகளை மூட வேண்டும் என்பது தான் முதலமைச்சரின் நோக்கமே தவிர, அவை எவ்வளவு தொலைவில் அமைந்திருக்கின்றன என்பது அல்ல. 500 மீட்டர் தொலைவு என்பது மூடப்படும் மதுக்கடைகளை அடையாளம் காண்பதற்கான காரணி மட்டும் தான் என்பதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். 717 மதுக்கடைகளும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றிலிருந்து 500 மீட்டருக்குள் தான் உள்ளன என்பதை உறுதி செய்த பிறகு தான் அவற்றை மூடுவதற்கு அரசு ஆணையிட்டிருக்கிறது. ஒருவேளை அந்தக் கடைகளில் ஏதேனும் சில 500 மீட்டருக்கு அப்பால் சிறிது தூரம் தள்ளி இருந்தாலும் அவற்றை மூடுவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மாறாக மக்களுக்கு நன்மை தான் ஏற்படும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.

717 மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவுக்கு எதிராக மது லாபி அதன் முழு வலிமையையும் பயன்படுத்தி வருகிறது. மதுக்கடைகளை மூட தடை விதிக்க வேண்டும் என்று அந்த லாபியின் தூண்டுதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், 717 மதுக்கடைகளை மூடும் அரசின் முடிவை பாராட்டியது. முதலமைச்சரின் நோக்கத்தையும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் டாஸ்மாக் அதிகாரிகள் செயல்படக் கூடாது.

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை ஒரே நேரத்திலோ, படிப்படியாகவோ மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். எந்தக் கட்சி ஆட்சியிலிருந்தாலும் இதை வலியுறுத்தி மதுக்கடைகளை மூடச் செய்து வருகிறோம். முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற மே 10-ஆம் தேதியே முதலமைச்சரின் முதல் 3 அறிவிப்புகளை வரவேற்று அறிக்கை வெளியிட்ட நான், தமிழ்நாட்டில் படிப்படியாக மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பின் மே 12-ஆம் தேதி 717 மதுக்கடைகளை மூடும் ஆணையை முதலமைச்சர் பிறப்பித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சந்துக்கடைகள் என்ற பெயரில் சட்டவிரோத மதுக்கடைகள் செயல்பட்டு வருவதை கடந்த 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் உரையாற்றிய பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டியவுடன் கணிசமான சந்துக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்; சட்டவிரோத மதுக்கடைகளை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் முதலமைச்சர் விஜய் செயல்பட்டு வருகிறார். அவரது நல்ல நோக்கத்தை நிறைவேற்ற அதிகாரிகள் துணை நிற்க வேண்டுமே தவிர, குறுக்கே நிற்கக் கூடாது. முதலமைச்சர் விஜய் ஆணையிட்டவாறு, 717 மதுக்கடைகளையும் வரும் 26-ஆம் தேதிக்குள் மூடி, மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதை டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.