சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து தொழிற்சாலைகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியில்லாத தொழிற்சாலைகளை, அவை சரி செய்யப்படும் வரை மூட ஆணையிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறியிருக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வாழத் தகுதியான பகுதிகளாக மாற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தலைநகர் தில்லியை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவிலேயே கும்மிடிப்பூண்டியில் தான் அதிக காற்று மாசு நிலவுவதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளிலும் மிக மோசமான காற்று மாசு நிலவும் சூழலில் அவை வாழத்தகுதியற்ற பகுதிகளாக மாறி வருவதைத் தடுக்க தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் மிக முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றான கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாட்களாக கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி கும்மிடிப்பூண்டியின் காற்றுத் தரக்குறியீடு கடந்த 19-ஆம் தேதி 305 ஆகவும், 20-ஆம் தேதி 321 ஆகவும் பதிவானது. 21-ஆம் தேதி காலையில் 342 ஆகவும், மாலையில் 346 ஆகவும் இருந்த காற்றுத் தரக்குறியீடு இரவு 9.05 மணிக்கு 362 என்ற உச்சத்தை அடைந்தது. இது தில்லி மாநகரின் காற்றுத் தரக் குறியீடான 265-ஐ விட கிட்டத்தட்ட 100 அதிகமாகும். சென்னையின் காற்று தரக்குறியீடும் தில்லிக்கு இணையாக 224 ஆக அதிகரித்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான சென்னை புறநகர் பகுதிகளிலும் காற்று மாசு அதிகரித்து மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்து வருகிறது.
காற்று மாசுத் தரக் குறியீட்டில் சென்னை புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி முதலிடம் பிடித்தது அண்மைக்காலங்களில் இது தான் முதல் முறை என்றாலும், சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று மாசு உச்சத்தை அடைந்திருக்கிறது என்பது எந்த வகையிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. ஏனென்றால், கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை புறநகர் பகுதிகள் காற்று மாசு தலைநகரமாக திகழ்வதை பாட்டாளி மக்கள் கட்சி நன்றாக அறிந்திருப்பதுடன், அதை சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.
கும்மிடிப்பூண்டி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் காற்றின் தரம் இந்த அளவுக்கு மோசமடைவதற்கு காரணம் அங்குள்ள தொழிற்சாலைகளும், அவற்றின் மாசுக்கள் கட்டுப்படுத்தப்படாததும் தான். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மட்டும் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அவை அனைத்துமே கரிம வாயுக்களை அதிகம் வெளியேற்றும் தொழிற்சாலைகள் ஆகும். இவை தவிர அதிக அளவிலான போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் ஆகியவையும் காற்று மாசுவுக்கு காரணமாக அமைகின்றன. தமிழ் நாட்டிலேயே மிக அதிகமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான அனல் மின்சார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதும் அம்மாவட்டத்தின் காற்று மாசுவுக்கு முக்கியக் காரணமாகும்.
சென்னையைச் சுற்றிலும் அளவுக்கு அதிகமான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாலும், அதையொட்டிய ஆந்திரம், திருப்பெரும்புதூர் பகுதிகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாலும் இந்த பகுதிகளில் சுற்றுச்சூழலையும், காற்று மாசுவையும் கட்டுப்படுத்த தொழிற்சாலைகள் மாசுக்கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்கின்றனவா? என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ச்சியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், அதை வாரியம் செய்வதில்லை.
மாறாக, தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறிச் செயல்படுவதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அதன் அதிகாரிகளும் கண்டும், காணாமலும் இருக்கின்றனர். அதனால், 2023-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எண்ணூர் யூரியா ஆலையில் அமோனியா வாயுக் கசிந்து 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவம் பெற்றது, 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெரியபாளையத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டு 18 தொழிலாளர்கள் உயிரிழந்தது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொசஸ்தலை ஆற்றில் பல டன் மீன்கள் உயிரிழந்து மிதந்தது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படாதது தான் காரணமாகும். இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கரிமவாயுக்கள் வெளியேற்றப்படுவதும், வேதிக்கழிவுகள் வெளியேற்றப்படுவதும் அரசால் கட்டுப்படுத்தப்படாததன் விளைவு தான் ஒட்டுமொத்த இந்தியாவிலும் அதிக மாசு நிலவும் பகுதியாக கும்மிடிப்பூண்டி உருவெடுத்துள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் பி.எம்.2.5 எனப்படும் 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான காற்று மாசுத் துகள்கள் மிகவும் ஆபத்தானவை ஆகும். பொதுமக்கள் சுவாசிக்கும் போது காற்றுடன் கலந்து நுரையீரலுக்கு செல்லும் இந்தத் துகள்கள் மனிதர்களுக்கு ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்புகள், இதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. தொழிற்சாலைகளின் முன்னேற்றத்திற்காக அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைத்து தொழிற்சாலைகளிலும் சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசு தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தகுதியில்லாத தொழிற்சாலைகளை, அவை சரி செய்யப்படும் வரை மூட ஆணையிட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வாழத் தகுதியற்ற பகுதிகளாக மாறியிருக்கும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை வாழத் தகுதியான பகுதிகளாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.