பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழர்களின் வாழ்வில் கொண்டாட்டங்கள் நிறைந்ததும், பாட்டாளி மக்களை ஒன்று கூடச் செய்வதுமான சித்திரை முழுநிலவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களின் திருநாளான இந்த நாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சித்திரை முழுநிலவு நாளின் முதன்மை நோக்கமே சொந்தங்களுடன் கடற்கரைகளிலும், நீர்நிலைகளின் கரைகளிலும் கூடி, குடும்பக் கதைகள் பேசி மகிழ்வது தான். இது நமது பண்பாடு. அந்தப் பண்பாட்டை விட்டுக் கொடுக்காமல் வாய்ப்புள்ள இடங்களில் சொந்தங்கள் ஒன்று கூடி கொண்டாடுங்கள்!
சரியாக ஓராண்டுக்கு முன் மே 11-ஆம் நாள் இதே சித்திரை முழுநிலவு நாளில் மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டை ஒட்டுமொத்த இந்தியாவும் வியக்கும் வண்ணம் மாமல்லபுரத்தில் நடத்திக் காட்டியதை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்ற ஒன்று கூடலை மீண்டும் நடத்தவும், பாட்டாளி மக்களுடன் ஒன்று கூடி மகிழவும் காத்திருக்கிறேன். அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் நிச்சயமாக இது நடந்தேறும்.
சித்திரை முழுநிலவு நாளின் சிறப்புகள் எண்ணிலடங்காதவை. காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திர விழா கொண்டாடப்படுவது இந்த நாளில் தான். மாமல்லபுரத்தில் பல்லவர்களும் சித்திரை முழு நிலவு நாளை மக்களுடன் கொண்டாடியிருக்கிறார்கள். இந்திர விழா சித்திரை முழுநிலவு நாளில் நடத்தப்பட்டதற்கு காரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அறுவடை முடிந்து பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் தான் ஓய்வாக இருப்பார்கள். அந்த நாளில் அவர்கள் கடற்கரையில் ஒன்றுகூடி, இசை, நடனம், பட்டிமன்றம், சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
நாட்டில் பசி, பிணி, பகை நீங்கவும், நிலம் செழிப்பதற்காக மழை பெய்ய வேண்டிதான் இந்திர விழாக்கள் நடத்தப்பட்டன. இதே நோக்கத்திற்காகத் தான் நாமும் சித்திரை முழுநிலவு நாள் மாநாடுகளை நடத்துகிறோம். தமிழ்நாடு என்ற நமது நிலமும், நமது குலமும் தழைக்க ஆண்டு முழுவதும் கடுமையாக உழைப்போம்; அந்த உழைப்பின் பயனை அறுவடை செய்து அதன் மகிழ்ச்சியை சித்திரை முழுநிலவு நாள்களில் கொண்டாடுவோம் என்று கூறி மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.