தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை அன்னூர் பகுதியில் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ராகவன் என்ற கைதி, சிறை வளாகத்தில் இருந்து தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சிறையிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
அன்னூர் காவல் நிலையக் காவலர்களால் நேற்று கைது செய்யப்பட்ட ராகவன் அப்போதே காவலர்களின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திப் பிடித்து தான் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தியுள்ளனர். இதைக் கவனத்தில் கொண்டு கோவை சிறை வளாகத்தில் கைதி ராகவனை பாதுகாப்புடன் கையாண்டிருக்க வேண்டும். சிறைக்காவலர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதே இதற்கு காரணம் ஆகும்.
சென்னை புழல் சிறையிலிருந்து கடந்த வாரம் இரு கைதிகள் தப்பி ஓடினார்கள். அந்த அதிர்ச்சி விலகும் முன்பே தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினார்கள். அதைத் தொடர்ந்து இப்போது கோவை நிகழ்வு நடந்துள்ளது. சிறைக் கைதிகள் இதுபோன்று அடிக்கடி தப்பி ஓடும் நிகழ்வுகள் விரும்பத்தக்கது அல்ல.
கோவை மத்திய சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி ராகவனை விரைந்து கைது செய்ய வேண்டும். தமிழக சிறைகளில் இருந்து கைதிகள் தப்பி ஓடுவதைத் தடுக்க பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.