தமிழக செய்திகள்

கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் மூட்டைகள்: உடனடியாக அகற்ற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொள்முதல் பணி முடக்கம்

காவிரி பாசன மாவட்டங்களில் கோடைப்பருவ நெல் அறுவடை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு அனுப்பப்படாமல் குவிந்து கிடப்பது தான் இதற்கு காரணம். இதில் அரசின் அலட்சியம் கவலையளிக்கிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கோடை பருவ நெல் சாகுபடி தொடங்கப்பட்டது. நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணி ஜூன் இறுதியில் தொடங்கியது. பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிவடைந்து விட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் வரை இந்தப் பணி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடை பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய காவிரி பாசன மாவட்டங்கள் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி முடங்கிக் கிடக்கிறது.

ஏமாற்றம்

இதற்கு காரணம் அரசு நிர்வாகத்தின் சரியான திட்டமிடல் இல்லாமை தான் என்று உழவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை அங்கிருந்து கிடங்குகளுக்கும், கிடங்குகளில் இருந்து அரவை ஆலைகளுக்கும் அனுப்பும் பணி சங்கிலித் தொடர் போல நடைபெற வேண்டும். ஆனால், இந்த சங்கிலித் தொடர் அறுபட்டு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அங்கேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதிய இடவசதி இல்லாததைக் காரணம் காட்டி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உழவர்கள் கொண்டு சென்ற நெல் மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

காவிரி பாசன மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பெரும்பாலானவை திறந்த வெளியில் அமைக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத வகையில் தென்மேற்கு பருவமழை காவிரி பாசன மாவட்டங்களில் தீவிரமடைந்தால் உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல் முழுமையும் வீணாகி விடும். ஆனால், இது குறித்த கவலை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

கொள்முதல் செய்யமுடியாத நிலை

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்காதது ஏன்? என்பது குறித்து அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளில் மலை போல குவிந்து கிடப்பதாகவும், அரவை ஆலைகளும் அளவுக்கு அதிகமான நெல் மூட்டைகளை கையாள முடியாத நிலையில் இருப்பதும் தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் உழவர் அமைப்புகள் கூறுகின்றன.

ஒருவேளை இது தான் உண்மை என்றால், உழவர்கள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களுக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டு குறுவை மற்றும் சம்பா பருவத்தில் அளவுக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டதால் கிடங்குகள் நிரம்பி விட்டன என்றால், கோடைப்பருவ கொள்முதல் மூலம் கிடைக்கும் நெல் மூட்டைகளை எவ்வாறு கையாள்வது? அவற்றை எங்கு அடுக்கி வைப்பது என்பதற்கான திட்டங்களை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆடி மாதம் பிறந்து விட்ட நிலையில், திருமண அரங்குகள் போன்றவற்றையாவது வாடகைக்கு எடுத்து தற்காலிக கிடங்குகளாக மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாததால் தான் உழவர்களின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

உறுதி செய்ய வேண்டும்

கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சரியான தருணத்தில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்ததையும், கொள்முதல் நடக்காததால் உழவர்களும் தங்களின் நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் திறந்த வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்ததையும், அவை அனைத்தும் வடகிழக்கு பருவ மழையில் நனைந்து வீணானதையும் எவரும் மறந்திருக்க முடியாது. அதனால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்தே காவிரி பாசன மாவட்ட உழவர்கள் இன்னும் மீளாத நிலையில், மீண்டும் அதே போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது.

எனவே, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கும், கிடங்குகளில் உள்ள மூட்டைகளை அரவை ஆலைகளுக்கும் போர்க்கால அடிப்படையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும். அதன் மூலம் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.